Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் சார்

டோண்டு ராகவன் சார்

திரு.டோண்டு ராகவன் இயற்கை எய்தி விட்டது குறித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போதைய மனநிலையில் விரிவாக எழுதவில்லை. இன்று காலையில் அவரது மரணச்செய்தி கிடைத்தபோது, 4 ஆண்டுகளுக்கு முன் எனது அக்கா மகன் அகாலமாக ஒரு விபத்தில் மரணித்தபோது ஏற்பட்ட அதே வலியை / தாக்கத்தை உணர்ந்தேன். அதற்கு அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் ஒரு காரணம்.

திருவல்லிக்கேணியும், இந்து உயர்நிலைப்பள்ளியும் தான் எங்கள் 8+ ஆண்டுகளுக்கான நட்புக்கு அச்சாரமிட்ட விஷயங்கள். 2004-ல் என் இடுகை ஒன்றை வாசித்து விட்டு என்னை தொடர்பு கொண்டு வலைப்பூ தொடங்குவது மற்றும் தமிழ் தட்டச்சு பற்றி கேட்டறிந்து கொண்டு அன்று எழுத ஆரம்பித்தவர், இறப்பதற்கு 2 நாட்கள் முன் வரை ஓயாமல் (சுமார் 1000 இடுகைகள் இருக்கலாம்) எழுதி வந்திருக்கிறார். அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை என்று தோன்றுகிறது. அது போல, கடைசி வரை ஏதாவது வாசித்துக் கொண்டே தான் இருந்தார்!

வாசிப்பனுபவம் அவரது மிகப்பெரிய பலம்! அதனால் அவரது தகவல்களில் தவறு காண்பது அரிது. அரசு நிறுவனத்தில் பொறியாளர் பதவியை உதறி விட்டு, தனக்குப் பிடித்தமான (பிரெஞ்சு, ஜெர்மன்) மொழிபெயர்ப்புத் தொழிலை இறுதி வரை மேற்கொண்டிருந்தவர். அவர் நேற்று தொடங்கிய மொழிபெயர்ப்பு பணி ஒன்று அவரது மடிக்கணினியில் அவருக்காக காத்து கொண்டிருக்கிறது! கடுமையான உழைப்பாளி அவர்.

போலி டோண்டு விவகாரத்தின்போது (அதில் அவர் நேரவிரயம் செய்திருப்பினும்) அவரது மன உறுதி பளிச்சிட்டதை பலரும் ஒப்புக் கொள்வர். தனது கருத்துகளின் மேலிருந்த பிடிப்பால், பலமுறை வலைப்பூ விவாதங்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட அளவில் பலருடனும் இனிமையாக நட்பாகப் பழகியவர் என்பதை நான் அறிவேன். போலித்தனம் துளியும் இல்லாதவர். அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், யாரையும் அவர் நிந்தித்துப் பேசி நான் கேட்டதில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு என்று போய்க்கொண்டே இருந்தவர்.

அவரது மரணத்திற்கு பாலபாரதி, நைஜீரியா ராகவன், லக்கிலுக், உண்மைத்தமிழன், ரஜினி ராம்கி ஆகியோர் வந்திருந்தனர். பாலா ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் டோண்டு சார், அதுவே அவரது தனித்துவமான சிறந்த பண்பு’ என்றார். உ.தமிழன் டோண்டுவைப் போல் எழுத இனி ஆள் கிடையாது என்றும், அவரது மரணம் தமிழ் வலையுலகுக்கு பெரும் இழப்பு என்றும் வருந்தினார். ர.ராம்கி, போலி டோண்டு விவகாரத்தில் தான் சிக்கியிருந்தால், தமிழ் இணையத்தை விட்டே ஓடியிருக்கக்கூடும் என்று டோண்டுவின் மனத்திண்மையை வலியுறுத்திப் பேசினார்.

புற்று நோய்க்கு எதிரான தனிப்பட்ட போராட்டத்திலும் அவரது அந்த மனத்திண்மையை பார்க்க முடிந்தது. தனக்கு கேன்ஸர் என்பதையே நோய் வந்து ஒரு 3 மாதங்களுக்குப் பின் தான் (சொல்லாவிட்டால் பின்னால் நான் கோபப்படுவேன் என்பதற்காக) தயங்கித் தயங்கி என்னிடம் தெரிவித்தார். எனக்கு தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதனை அறிமுகம் செய்து வைத்தவரும் அவரே! அதுவே, என் நவதிருப்பதி விஜயத்துக்குக் காரணமாக அமைந்தது. ஆன்மீகம் பற்றி டோண்டு அவர்கள் அதிகம் எழுதியிராவிட்டாலும், பெருமாள் மேல் ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர். என் திருப்பாவை இடுகைகளின் ரசிகர் அவர், பலமுறை மனதார பாராட்டியும் இருக்கிறார்.

“உங்கள் தாயார் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை ஆளாக்கியிருக்கிறார். அவரை கடைசி வரை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். என் மகள்களை (அவருக்கு வாய்க்காத) பேத்திகளாக பாவித்து அன்பு செலுத்தியிருக்கிறார். என் தந்தையும், என் மனைவியின் தந்தையும் என் மகள்கள் பிறப்பதற்கு முன்னமே இறந்து போனதால், என் மகள்களுக்கு அறிமுகமான முதல் தாத்தா (இந்த அடைமொழி அவருக்குப் பிடிக்காதிருந்தபோதிலும்) டோண்டு ராகவன் சார் தான்!

டோண்டுவிடம் சிலபல குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவரது பிரத்யேக குணங்களான, கடும் உழைப்பு, நிறைந்த வாசிப்பனுபவம், போலித்தனமின்றி நட்பு பாராட்டும் / உதவும் குணம், மன உறுதி, சிறந்த அறிவாற்றல், அசாத்திய மொழித்திறமை ஆகியவற்றை 8 ஆண்டுகளூக்கும் மேலாகஅருகிலிருந்து கவனித்தவன் என்ற வகையில், அவர் ஒரு மாமனிதர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

ஒரு 7 மாதங்களுக்கு முன் டோண்டு குடும்பத்துடன் மகர நெடுங்குழைக்காதனை தரிசிக்க சென்றபோது, உடல் நிலை சற்றே சரியில்லாத காரணத்தால், அவரை மதுரையிலேயே விட்டு விட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமே தென் திருப்பேரை சென்று பெருமாளை தரிசித்ததாக அவரது துணைவியார் என்னிடம் கூறினார். டோண்டு சாரின் அந்த மனக்குறையை மகரநெடுங்குழைக்காதனே நிவர்த்தி செய்தது தான் விசேஷமான விஷயம். 2 மாதங்களுக்கு முன் டோண்டுவை தன்னிடம் வரவழைத்து அவருக்கு திவ்யமான தரிசனத்தை வழங்கியிருக்கிறார். மகரநெடுங்குழைக்காதன் மீது அவருக்கு இருந்த பரமபக்தி அத்தகையது! 

எந்தரோ மகானுபாவுலு, அந்தரி கி வந்தனமுலு --
டோண்டு ராகவன் சாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் பரமபத நாயகனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

3 மறுமொழிகள்:

said...

RIP Dondu Sir...

said...

நான் கவனித்ததில், எ.அ.பாலாவின் வலைத்தள பிளாக் கவுண்ட்டர் எண்ணிக்கை ஒரு நாளில் 1700-க்கும் மேல் எகிறியிருக்கிறது. டோண்டு தமிழ் வலை உலக சச்சின் தெண்டுல்கர் என்பது அன்னாரின் மரணத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

said...

அருமையான கட்டுரை, டோண்டு சார் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.

சம்பந்தப்பட்ட கேள்வி ஒன்று. டோண்டு சாருக்கு ஆண் வாரிசு இல்லை என்ற போது அவரது இறுதிக்காரியங்களையும் இன்னபிற வைதீக காரியங்களையும் யார் செய்கிறார்கள்?

பெண்(கள்) வாரிசு மட்டுமே உள்ள பெற்றோர் இறந்தால் அவர்களுக்கு பேரன் இல்லாத பட்சத்தில், மறைந்தவருக்கு சகோதரரோ, நெருங்கிய உறவினரோ இறுதி/பின்னர் வைதீக/பித்ரு காரியங்கள் செய்ய முன்வராத நிலையில் அவர்களுக்கு பித்ருகாரியங்கள் செய்ய இயலாது போகும் இல்லையா? இதைப்பற்றி உங்கள் குடும்ப புரோகிதரிடம் பேசியதுண்டா? விபரம் தெரிந்தால் தனிப்பதிவு எழுதவும். நன்றி, மகேஷ்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails